திரு.சித்திக் அவர்கள், 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில நிலையிலான இந்திய ஆட்சிப் பணி (இ.ஆ.ப) அதிகாரி ஆவார். இவர், தமிழ்நாடு அரசிலும், இந்திய அரசிலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தற்போது, ஜூன் 2022 முதல், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் (சி.எம்.ஆர்.எல்) நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
23 ஆண்டுகளுக்கும் மேலான சேவை சாதனையுடன், திரு.சித்திக் அவர்கள், பொதுநிதி, கொள்கை வகுத்தல், உள்கட்டமைப்பு மற்றும் பொது நிர்வாகத்திலும் நிபுணத்துவத்தைப் பெற்றுள்ளார். 1997-1998 வரை, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் துணை ஆட்சியராகவும், பின்னர் 1998 இல் நிதித்துறையில், அரசின் கீழ்நிலைச் செயலாளராகவும், 1999 முதல் 2002 வரை நிதித்துறையில், துணைச் செயலாளராகவும், அரசின் நிதியறிக்கை அதிகாரியாகவும் பணியாற்றினார். 2002 முதல் 2004 வரை தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும், 2006 முதல் 2007 வரை சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினார். 2004 முதல் 2006 வரை இரண்டு ஆண்டுகள், அருங்காட்சியகங்களின் இயக்குநராகவும், 2014 முதல் 2017 வரை மூன்று ஆண்டுகள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராகவும் பணியாற்றினார். இவர், 2017 முதல் 2019 வரை, நிதித் துறையின் முதன்மைச் செயலாளராகவும் (செலவு), 2019 முதல் 2021 வரை வணிகவரி ஆணையராகவும் பணியாற்றினார். டிசம்பர் 2021 முதல், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்ற, ஜூன் 2022-க்கு முன்பு வரை, வருவாய் நிர்வாக ஆணையராக பதவி வகித்தார்.
திரு.சித்திக் அவர்கள், 2008 முதல் 2009 வரை, ஒரு வருடம் மத்திய அரசின் செலவினத் துறையில் இயக்குநராகப் பணியாற்றினார். மேலும், 2009 முதல் 2014 வரை, ஐந்து ஆண்டுகள் மத்திய அரசின் உள்துறை மற்றும் நிதி ஆகிய இரண்டு முக்கிய அமைச்சகங்களில் பணியாற்றினார்.
திரு.சித்திக் அவர்கள், இறகுப்பந்தாட்ட விளையாட்டை விரும்புபவர். 2015-ஆம் ஆண்டில் ‘ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘சுவிஸ் ஓபன்’ போட்டிகளுக்கு, இந்திய இறகுப்பந்தாட்ட அணியின், மூத்த அணி மேலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், 2016-ஆம் ஆண்டில், பிரீமியர் இறகுப்பந்தாட்ட தொடரின் ஆட்சிமன்ற குழுவிலும் இருந்துள்ளார்.
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : August 5, 2024